Friday, March 19, 2010

படப்பெட்டி...

எவ்வளவோ மறக்கமுடியாத சிறுநினைவுகள், அதில் இன்பம் தரும் நினைவுகள் ஏராளம், அதைப் பற்றி பேசும்பொழுது நண்பர்கள் அனைவர் மனதிலும் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறக்கும். ஆனந்தத்தில் வானில் பறப்பது போல் இருக்கும், இறுதியில் மிஞ்சுவது ஏக்கம் மட்டும்தான். காலம் எவ்வளவு மாறிவிட்டது!

என்னுடைய சிறுவயதில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மாலையும் இல்லத்தில் மக்கள் வெள்ளம் நிறைந்திருக்கும், காரணம் ஒளியும் ஒலியும் பார்ப்பதற்கும், தமிழ் படம் பார்ப்பதற்கும் தான். காத்திருந்து பார்க்கும் சுகமே தனிதான். அதே போல் அன்றிருந்த இளவட்டங்கள் எல்லோருக்கும் இருக்கும் ஆர்வம் தாமும் ஒரு படம் காட்ட வேண்டும் என்பதுதான். கிராமங்களில் இருக்கும் எங்களால் படமெல்லாம் எடுக்க முடியாது, ஆனால் நன்றாகவே படம் காட்ட முடியும், அதில் ஒரு முயற்சிதான் இந்தப் படப் பெட்டி.

பொதுவாக இரண்டு குழுக்கள் இருந்தது எங்களது தெருவில், அதில் ஒன்று மூன்று முதல் ஐந்து வகுப்பு வரைப் படிக்கும் எங்களது குழு, இரண்டாவது ஆறில் இருந்து எட்டு வகுப்பு வரைப் படிக்கும் எங்களது சகோதரர்களின் குழு. இரண்டுக்கும் சரியானப் போட்டியிருக்கும், எதற்கு? படம் காட்டுவதற்குதான்!

ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து, இரண்டு துவாரங்கள் எதிர் எதிர் சுவரில் இட்டு விடுவோம், ஒரு துவாரத்தில் லென்ஸ் பொருத்தப்படும், மற்ற துவாரம் டார்ச் லைட்டைப் பொருத்தி ஒளியை அடிப்பதற்காக. இடையில் இரண்டு உருளைகள் ஃபிலிம் ரோல் சுற்றுவதற்காக, அதில் சுற்றுவதற்காக கைப்பிடி எல்லாம் வைத்து அந்தப் பெட்டியை எடுத்துக் கொண்டு தெருவில் போய் ப்ரொஜெக்டர் ரெடி, ரெடி என்று கூட்டமாய் ஓடி ஒரே அமர்க்களம் தான். அன்றிருந்த ஒவ்வொரு சிறுபயலும் ஒரு சையிண்டிஸ்ட் தான்! ஆனால் இதைச் செய்வதும் சாதாரண வேலையல்ல! ஒரு ரூபாய் கொடுத்து வாங்கி வரும் லென்ஸின் ஃபோக்கல் லென்த் எவ்வளவு இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அப்படி வாங்கி வந்த லென்ஸை ஃபிக்ஸ் செய்ய எத்தனை அட்டைப் பெட்டிகள் வேறு வேறு அளவை எடுத்துப் பார்க்க வேண்டும் தெரியுமா! இந்த அட்டைப் பெட்டிகள் பல கடைகள் ஏறி இறங்கி பொருக்கப்படும். பல சோதனைகளுக்குப் பிறகு ஒரு பெட்டி சரியாகப் பொருந்தும்.

ப்ரொஜெக்டர் எல்லாம் ரெடிதான் ஆனால் ஃப்லிம் ரோல்? அன்று இருந்த சின்னச் சின்ன பெட்டிக் கடைகளிலெல்லாம் ஃப்லிம் விற்கப்படும், அதிகமாய் கிடைப்பது எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் படத்தின் ஃப்லிம்கள் தான். ஆனால் அவையெல்லாம் ரோல் ஆக கிடைக்காது. சிறிய சிறிய துண்டாகத்தான் கிடைக்கும். முதலில் அந்தப் பெட்டிக்குள் ஒவ்வொரு ஃப்லிமாக கையில் பிடித்துக் கொண்டு டார்ச் அடித்து சுவரில் அந்தப் ஃப்லிமின் உருவத்தைப் பார்ப்போம், பெரிதாக தெரியும் அதன் உருவத்தைக் கண்டவுடன் மனதில் பிறக்கும் குதூகலமும், ஆனந்தச் சிரிப்புகளும் அப்பப்பா! இன்று நினைத்தாலும் ஆனந்தம் தான்.

இந்த சிறு சிறுத் துண்டுகளை வைத்துப் படம் ஓட்டுவது எப்படி? கூட்டமாய் உட்கார்ந்து யோசித்தோம். பிறகு ஒரு முடிவுக்கு வந்து, இந்த சிறு ஃப்லிம்களையெல்லாம் நூல் கண்டின் உதவியால் அதன் சைடில் இருக்கும் துவாரத்தின் வழியாக இணைத்து ரோல் ஆக்கிவிடலாம் என்று முடிவுசெய்து களத்திலும் இறங்கினோம். ஆனால் நூல் கண்டுகள்தான் வேஸ்டானது, ஒரு ஃப்லிம் ரோல் கூடத் தயாராக வில்லை! ஒரே சோகமாகிப் போனது!

இதற்கிடையே எங்கள் போட்டிக் குழுவான சகோதரர்களின் குழுவில் ஒரு பையன் எங்கோ வெளியூரில் இருந்து ஒரு ஃப்லிம் ரோல் வாங்கி வந்தான், அதை வைத்துப் பெரிய ஸீன் போட்டுக் கொண்டு திரிந்தார்கள். எங்களுக்கோ ஒரே பொறாமை அவர்கள் மேல்! ஒரு நாள் மின்சாரம் கட் ஆன இரவு, நாங்கள் இன்று படம் காட்டப் போகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு பெட்டியை எடுத்துக் கொண்டு கூட்டம் சேர்த்தார்கள். எங்களோடு இருந்தப் பலப்பேர் அந்தக் கூட்டத்தில் சென்று சேர்ந்து விட்டார்கள். அதனால் பெரிய சண்டை எல்லாம் நடந்தது, சில நண்பர்களுடன் உன் பேச்சு காய் என்று சொல்லிவிட்டு சிலநாட்கள் பேசாமல் எல்லாம் இருந்தோம். படம் காட்டுகிறேன் என்று ஜம்பம் விட்ட அவர்களின் பேச்சு பொய் ஆகிப் போனது, ஃப்லிம் ரோல் தான் அவர்களிடம் இருந்ததே தவிர் அவர்களின் படப்பெட்டியின் டெக்னாலஜி ஃபெய்லியர் ஆகிப் போனது, ஃப்லிம் ரோல் சுத்தவே இல்லை. வெறும் டார்ச் லைட் வெளிச்சம் மட்டும்தான் தெரிந்தது. எங்களுக்கோ ஒரே கொண்டாட்டம், அவர்களுக்கு திண்டாட்டம்.

அதன் பிறகு, எங்களது அந்தப் பெட்டியை வைத்துக் கொண்டே சிலமாதங்கள் திரிந்தோம், எங்களுக்கு ஃப்லிம் ரோல் கிடைக்கவேயில்லை. வெறும் சிங்கிள் பிக்சரை வைத்து வைத்துப் பார்த்து ஆறுதல் பட்டுக் கொண்டு திரிந்தோம். பிறகு, ஆண்டு இறுதித் தேர்வு வந்தவுடன், பெட்டி பரணுக்குப் போனது நாங்களும் அந்தக் கோடை விடுமுறையில் அதை மறந்துவிட்டு வேறு விளையாட்டுகளுக்கு திரும்பி விட்டோம்...

சில சையிண்டிஸ்டுகள் அப்பொழுதே உருவாகியிருக்க வேண்டியது, என்ன செய்வது காலத்தின் கட்டாயமும் சந்தர்ப்பமும் சரியாக அமையவில்லை :-)

4 comments:

 1. "மலரும் நினைவுகள்"! மிகவும் அருமை!!!

  நன்றி

  வர்தினி

  ReplyDelete
 2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 4. எங்கேயோ நினைவுகளை இழுத்துக் கொண்டு போகுதே சதீஸூ... நாங்கள் எங்கள் ஊர் லட்சுமி டெண்ட் கொட்டாயில் இடைவேளை போது ப்ரொஜக்டர் ரூம் அருகே சென்று ஆபரேட்டரிடம்"அண்ணா அண்ணா கட் பண்ணி போட்ட ரோல் குடுங்கண்ணானு கெஞ்சி வாங்கி வந்து போடுவோம்.

  ReplyDelete

வருகை புரிந்தோர் வரைபடம்...

Click to zoom in on my visitor map!
Create your free world visitor maps