Friday, November 20, 2009

டிக்...டிக்...யாரது?

நான் பிறந்த ஊர், திட்டமிட்டு நல்ல வடிவமைப்பு கொண்ட ஊர், பேரூராட்சியாய் இருந்தது நான் அங்கு வளர்ந்த சமயம். தேர் ஓடுவதற்காக நான்கு சாலைகளை ஏற்படுத்தி சதுரமாக வடிவமைத்திருக்கின்றனர் எங்கள் முன்னோர். இந்த ஊரில் உள்ள ஒவ்வொரு தெருக்களுமே நல்ல கான்கிரீட் சாலைகளையும், open drainage எனப்படும் கழிவுநீர் வாய்க்கால்களும் சுமார் 30 வருடங்களுக்கு முன்னேயே ஏற்படுத்தப் பட்டிருந்தன. என்னடா இது டிக்...டிக்...என்று தலைப்பை போட்டுவிட்டு ஏதோ ஊரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கறானே என்று தானே யோசிக்கிறீர்கள், சற்று பொறுங்கள் விஷயத்துக்கு வருகிறேன்.

நல்ல கான்கிரீட் சாலைகள் இருந்ததாலோ என்னவோ மாலை மயங்கி சூரியன் மறைந்து விட்டால் தெருவில் பெரியோர், சிறியோர் என அனைவரும் கூடி விடுவோம். காலையும் மாலையும் நீர் தெளித்து, தென்னைக் குச்சி விளக்கமாறைப் போட்டு சுத்தம் செய்த தெருக்களாதலால், அனைவரும் தெருவிலேயே அமர்ந்து கொண்டு விளையாடுவோம். தகராறு வந்தால் அங்கேயே கட்டிப் பிடித்து உருளுவதும் தவறாது நடக்கும். இப்படி தெருக்களில் ஆண்களும், பெண்களும், சிறியவர்களும், சற்றே உயர்பள்ளியில் படிக்கும் பெரியவர்களும் சேர்ந்து ஏராளமான விளையாட்டுகளில் ஈடுபடுவோம். அதில் ஒன்றைத் தான் இப்பொழுது நான் இங்கு எழுதப் போகிறேன்.

இந்த விலையாட்டு ஒரு பேய் சம்பந்தப் பட்ட விளையாட்டு. இதில் முதலில் சாபூத்திரி போட்டு யார் அவுட் என்று முடிவு செய்யப்பட்டவுடன் ஒருவர் பேயாக மாறுவார். மற்றவர்கள் எல்லாம் மனிதர்கள்.

இந்தப் பேயானவர் சற்று தூரத்தில் நின்று கொண்டு டிக்...டிக்...என்று கதவைத் தட்டுவார். கதவை தட்டுவதென்றால் கதவெல்லாம் இருக்காது, சும்மா வாயிலேயே டிக்...டிக்...என்று சப்தம் செய்வதுதான். அதற்கு மற்ற குழுவில் இருக்கும் மூத்தவர் ”யாரது” என்று பதில் கேள்வி போடுவார்.

டிக்...டிக்...

யாரது?

பேயிது

என்ன வேண்டும்?

நகை வேண்டும்

என்ன நகை?

கலர் நகை

என்ன கலர்?

.....

என்ன கலர் என்று குடும்பத் தலைவர் கேட்டதும், பேய் ஒரு கலரை சொல்லும். உதாரணத்திற்கு பச்சை என்று சொல்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள், அது சொல்லி நம் அருகில் வருவதற்குள் எங்கு பச்சைக் கலர் இருக்கிறதென்று தேடி அதை நம் விரலால் தொட்டு விடவேண்டும். இல்லை பேய் உங்களைத் தொட்டுவிட்டதென்றால் நீங்கள்தான் அடுத்தப் பேய். என்ன புரிந்து விட்டதா? இதுதான் விளையாட்டு.

படிப்பதற்கு மிகவும் சிறிய விளையாட்டுதான், ஆனால் இதை ஆரம்பித்தால் ஒரு மாலை முழுவதும் விளையாடுவோம். அதோடு பேய் கேட்கும் முன்னே என்ன என்ன நிறங்கள் நமக்கு அருகில் இருக்கிறது என்பதை முன்னரே தேடிப்பார்த்து வைத்திருக்கவேண்டும். அதே போல் பேயாக வருபவரும் என்ன என்ன நிறங்கள் அருகாமையில் இருக்கிறது என்னவெல்லாம் இல்லை என்று பார்த்து வைத்திருக்க வேண்டும். நல்ல கிராஸ்பிங் பவர் தேவை அதோடு விரைந்து ரியாக்ட் பண்ணுவதும் அவசியம்.

சில குறும்புக்கார சிறுவர்கள் என்ன வேண்டும்? நகை வேண்டும் என்ற இடத்தில் ஏடாகூடமாக சிலவற்றை கேட்பதும் உண்டு...

நல்ல விளையாட்டு அல்லவா?

நீங்களும் விளையாடிப் பாருங்கள்.

கொசுறு:
இந்த விளையாட்டை விளையாடும் பொழுது சில பெரிய பெண்களும் எங்களுடன் விளையாடுவார்கள், அவர்கள் உடையிலும் பல வண்ணங்கள் எல்லாம் இருக்கும். என்ன சொல்ல வருகிறேனென்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் அந்த சிறு வயதில் ஒன்றும் புரியவில்லை, இப்பொழுது நினைத்தால்தான் பயமாக இருக்கிறது ;-)

Sunday, June 28, 2009

பனை ஓலைக் காத்தாடி

நாம் ஏற்கனவே பட்டம் என்னும் காத்தாடியைப் பற்றி பகிர்ந்துகொண்டோம் நம் நினைவுகளை. இந்தக் காத்தாடியை அதோடு ஒப்பிட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம், இது காத்தாடி (fan) வகையைச் சேர்ந்தது.

சிறுவயதில் வீட்டில் விளையாடப் போகிறோம் என்று சொல்லிவிட்டு, நைசாக தப்பித்து சோளக்காட்டுக்குச் செல்வோம். அங்கு சோளத்தட்டை காட்டின் சொந்தக்காரருக்கு தெரியாமல் உடைத்து எடுத்து வந்து, அதோடு பனை ஓலையை கூட்டல் குறி வடிவத்தில் செய்து, நல்ல பெரிய முள்ளால் அந்தப் பனை ஓலையில் நடுவில் குத்தி சோளத்தட்டின் ஒரு முனையில் சொருகிவிடுவோம். அப்புறம் என்ன காத்தாடு ரெடி! அதை அப்படியே காற்று வரும் திசையில் காட்டினால் போதும் அருமையாக அந்தப் பனை ஓலை சுத்த ஆரம்பிக்கும். அப்புறம் என்ன திரும்பவும் போட்டிதான்.

யாருடைய ஓலை மிகவும் வேகமாக சுத்திகிறதோ அவர் முகத்தில் தெரியும் வெற்றிக் களிப்பு அப்பப்பா இன்று நாம் வேகமாக ஓட்டும் விலையுயர்ந்த ரிமோட் காரில் கூடத் தெரியாது. காரணம் டெக்னாலஜி, நம்முடைய சொந்த டெக்னாலஜி அல்லவா அது!

அப்படியென்ன பெரிய டெக்னாலஜி என நீங்கள் கேட்கலாம், ஆனால் நாம் வெட்டும் பனை ஓலை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும், அதோடு முள் குத்தும் விஷயமும் மிகவும் முக்கியம். முள்ளை ஒடிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும், சிறிது கவனம் தவறினாலும் விரலை பெயர்த்து விடும். இது எல்லாம் சரியாக இருந்தால் தான் அந்தக் காத்தாடி பறக்கும் இல்லையேல் அம்பேல்தான், முகத்தை தொங்கப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

காத்தடிக்கலனாலும் பரவாயில்ல, அந்தக் காத்தாடிய அப்படியே கையில பிடிச்சுகிட்டு ஓடினா போதும், சும்மா கரகரனு சூப்பரா சுத்தும். இதெல்லாம் நல்ல என்ஜாய் பண்ணிட்டு புழுதி படிஞ்சி வீட்டுக்குப் போனா நல்லா மொத்துவாங்க, இருந்தாலும் அடுத்த வாரம் லீவுலயும் அதே சோளக் காட்டுக்கு கால் தானா போகும்.

நம்மளோட மூளைக்கும் நல்ல வேலை, அதே நேரத்துல உடம்புக்கும் நல்ல எக்ஸர்சைஸ்...

நாம பேட்டண்ட் வாங்காம விட்டதால இன்னைக்கு இதையே சைனாக்காரன் பிளாஸ்டிக்ல செஞ்சி 20 ரூபாய், 30 ரூபாய்னு நம்ம கிட்டயே விக்கறான் நாமளும் நம்ம குழந்தைங்களுக்கு வாங்கிக் குடுக்குறோம். ரொம்ப ஹை டெக் வேர்ல்டா போயிடுச்சு, ஆனா நம்ம வாண்டுகளோட மூளை வளர்ச்சி அண்ட் திங்கிங் பவர்?!!!!

Monday, June 1, 2009

பம்பாய் மிட்டாய்...

இன்னிக்கு வகை வகையாக சாக்லெட்டுகள், இனிப்புகள் ஆயிரக்கணக்கில கிடைக்குது, ஆனாலும் அந்த நாளில சாப்பிட்ட பம்பாய் மிட்டாயைப் போல வருமா!

ஒரு குச்சியின் உச்சியில சலங்கையும், ஜால்ராவும் கையில வைத்திருக்கும் பொம்மையை வைத்துக் கொண்டு ச்சலக்கு ச்சலக்கு ஜல் ஜல் என்று சத்தம் செய்து கொண்டு வருவான் பம்பாய் மிட்டாய்க்காரன். அப்படி என்ன அதுல விஷேசம்! சிவப்புக் கலரும், வெள்ளைக் கலரும் வரி வரியா இருக்குற மிட்டாய் அது. ஒரு குச்சியோட உச்சியில பொம்மை இருக்கும், அந்த பொம்மையோட கையில ஜால்ராவ கட்டி அதுல இருந்து தொங்கற கயித்த பிடிச்சி ஜல் ஜல்னு அடிச்சிகிட்டே வருவான். அந்த பொம்மைக்கு கீழ ஒரு பாலிதீன் பை சுத்தி இருக்கும் அதுக்குள்ளதான் நம்ம பம்பாய் மிட்டாய சுத்தி வைச்சிருப்பான் மிட்டாய்க்காரன்.

ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்தா நீளமா வரும், நல்ல சுவையாவும் இருக்கும். இதுல விஷேசமே நீங்க குடுக்கற காசுக்கு தகுந்த மாதிரி நீங்க விரும்பற வடிவத்துல கெடைக்கும் இந்த மிட்டாய். வாட்ச் மாதிரி வேணுமா, காந்தி கடிகாரம் மாதிரி வேணுமா, மோதிரம் வேணுமா, இல்ல வளையல் மாதிரி வேணுமா என்ன மாதிரி வேணும்னு சொல்லுங்க அந்த மாதிரி கெடைக்கும் பம்பாய் மிட்டாய்.

அதை சாப்பிடறமோ இல்லையோ, வாங்கி கையிலயும், கழுத்துலயும் கட்டிகிட்டு மத்த பசங்க முன்னால கொஞ்சம் ஸீனப் போட்டுட்டு சாப்பிடற சந்தோஷம் இருக்கே அது எந்த கேட்பரீஸ்லயும் வராது.

பம்பாய் மிட்டாய்க்காரன் ரெகுலரா எல்லாம் வரமாட்டான், வாரத்துக்கு ஒருதடவைதான் வருவான். அப்படி வந்தான் தெருவுல இருக்கற அத்தனை வாண்டுகளும் சரி, பெரிய பசங்களும் சரி ஒரு பெரிய கூட்டமே அவனை சுத்தி நிற்கும்.

ஹீம், இன்னிக்கு அதெல்லாம் எங்க கெடைக்குது, அப்படியே கெடைச்சாலும் நம்ம பசங்கள வாங்கி சாப்பிட விடுவமா நாம! இதுதான் நம்ம அறிவியலின் வளர்ச்சி, கண்ண வித்து ஓவியம் வாங்குற மாதிரி...

கொசுறு: பம்பாய் மிட்டாய்ன உடனே பம்பாய்ல இருந்து இறக்குமதி பண்ணினது நெனைச்சுக்காதீங்க, நம்ம ஊரு மாரியம்மன் கோவில் பக்கத்துலதான் மிட்டாய காய்ச்சுவான்...

Tuesday, May 26, 2009

என் பட்டமே பற பற பற பற.........

ஆடிக் காத்துல அம்மியும் பறக்கும்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? அம்மி பறக்குதே இல்லையோ நம்ம பசங்க விடற பட்டம் அதாங்க மெட்ராஸ் பாஷையில காத்தாடி, ரொம்ப ஜோரா பறக்கும்.
பட்டம்னு சொன்ன உடனே பழசெல்லாம் ஞாபகத்துக்கு வருதுங்க, எங்க ஊர் தேர்முட்டி (தேரடி) பக்கத்துல ஒரு இருபது இருபத்தஞ்சு படிக்கட்டு வச்ச மேடை இருக்கும் அதுக்கு பக்கத்துல தேர நிறுத்தி வச்சிருப்பாங்க, ஆடி மாசம் வந்துட்டா எங்க பக்கத்துப் பசங்க எல்லாரும் கையில நூலேட அந்த மேடை மேலதான் நிப்பாங்க. எல்லாரும் பட்டம் விட்டுகிட்டு ஒரே ஜாலிதான் போங்க, ஆனா இந்த மாஞ்சா கீஞ்சானு சொல்றாங்களே அதெல்லாம் ஒன்னும் தெரியாது எங்களுக்கு. அப்புறம் பட்டம் காசு குடுத்தெல்லாம் வாங்க மாட்டோம், நாங்களே செஞ்சிடுவோம், ஆமா இது என்னா பெரிய கம்பசூத்திரமான்னு கேக்கறீங்களா!

அப்பவெல்லாம் வீட்டுல ஒரே ஒரு பட்டம் வாங்கதான் காசு தருவாங்க, நம்ம தெருவில இருக்கற சில வெவரமான பசங்க இந்த சமயத்துல நல்ல காசு பார்ப்பாங்க. ஒரு ஐம்பது காசுக்கு கலர் பேப்பர் வாங்கினா போதும் அதுல சிறுசு பெரிசுனு ஒரு அஞ்சு அல்லது ஆறு பட்டம் பண்ணிடுவாங்க, அத வீட்டுக்கு வெளியில ஒரு கயித்துக் கட்டில் போட்டு அதுல கட்டி வச்சிருப்பாங்க (அதாங்க Display). எப்படியும் ஒரு பட்டம் 25 காசுல இருந்து 1 ரூபாய் வரைக்கும் சைஸ் வாரியா பிரிச்சி வித்துடுவாங்க.

எப்படியாவது பைசாவ தாத்தாகிட்டயோ இல்ல பாட்டிக்கிட்டயோ வாங்கிட்டு போய் ஒரு பட்டம் வாங்கிடுவோம். ஆனா ஒன்னு அப்படி வாங்கின பட்டம் எப்படியும் ஒரு மணி நேரத்துக்குள்ள கிழிஞ்சிடும் இல்ல எங்கயாவது ஒரு வீட்டு ஓட்டுலயோ இல்ல பெரிய மரத்துலயோ போய் மாட்டிக்கும். அது எப்படினா? நல்லா காத்து அடிக்கும்போது பட்டம் ரொம்ப உயரமா பறக்கும், உடனே போட்டி வந்துடும் “ டேய் என் பட்டம்தாண்டா அதிக உயரத்துல பறக்குது” அப்படீனு ஒருத்தன் கத்திட்டான்னா உடனே அடுத்தவன் நூல்கண்டு புதுசா வாங்கிட்டு வந்து நீளத்த அதிகமாக்குவான், அப்புறம் அவனும் அதே மாதிரி கத்துவான், இப்படியே ஒவ்வொருத்தரா ஆரம்பிக்க கடைசியில் யாரோட பட்டமும் திரும்பி வராது. இந்த நூல்கண்டு பிரச்சினைக்காகவே நாங்க ஒரு வாரத்துக்கு முன்னாலயே ஒரு பத்து நூல்கண்டாவது வாங்கிட்டு வந்து ஒரு குச்சியில முடிச்சி போட்டு முடிச்சி போட்டு சுத்தி வச்சிடுவோம்.

பட்டம் கிழிஞ்சி போயிடிச்சினா சும்மா இருப்போம்னு மட்டும் நினைக்காதீங்க! நாங்க பட்டத்த வாங்கின உடனே அதோட டெக்னாலஜி என்னானு ஸ்டடி பண்ணிடுவோம். அதுக்கப்புறம் வீட்டுல கிடைக்கற பழைய செய்தித்தாள வச்சி, தென்னை இலையிலிருந்து வருமே அதுதாங்க நம்ம விளக்கமாறு (துடைப்பம்) அதுல இருந்து குச்சிய உருவி, பசையெல்லாம் போட்டு பக்காவா பட்டம் ரெடி பண்ணிடுவோம். அப்புறம் என்ன, இன்னொரு முறை அதே மாதிரி போட்டிதான்.
அப்புறம் காத்து நிக்கற வரைக்கும் இதே வேலைதான். சில ஆர்வக் கோளாறு பசங்க பட்டத்த பள்ளிக்கூடத்துக்கு எடுத்துகிட்டு வந்து இடைவேளை நேரத்துல எல்லாம் கூட பறக்கவிட்டு ஸீனப் போடுவாங்க.

சின்னப் பசங்க, புதுசா பட்டம் விடுறவங்க ஒரு பத்தடி நீளக் கயிறுல பட்டத்த கட்டிக்கிட்டு ஓடு ஓடுனு ஓடுவாங்க பாருங்க... அப்பப்பா ஊரே ஒரே களைக் கட்டி இருக்கும் இந்த நேரத்துல. சில நேரத்துல பெரியவங்களே வந்து நல்லா உயரத்துல பறக்குற பட்டத்த பார்த்து பாராட்டுவாங்க பாருங்க, அப்ப நாம என்னவோ அந்த பட்டத்து மேலயே உட்கார்ந்து பறக்குற மாதிரி இருக்கும்...

இதெல்லாம் சின்னப் பசங்கதான் விளையாடலாம்னெல்லாம் ஒன்னும் கிடையாது, நம்மளும் எந்த வயசுலயும் விளையாடணும். அப்பத்தான் நாமளும் இளமையா இருப்போம், நம்ம மனசும் இளமையா இருக்கும், நம்மக் குழந்தைங்களுக்கும் மகிழ்ச்சியா இருக்கும். ஆயிரம்தான் வசதிகள் இன்னிக்கு இருந்தாலும், அந்த நாள் குடுத்த மகிழ்ச்சி இன்னிக்கு கிடைக்குதா?

அதனால எல்லாரும் ரெடியா இருங்க, கடற்கரைக்கு போறவங்க காத்தடிச்ச பலூனெல்லாம் வாங்காதீங்க, நல்ல ஒரு பட்டம் வாங்கி விடுங்க. கிடைக்கலனா சொல்லுங்க எப்படி பட்டம் செய்யறதுங்கற டிப்ஸ் நான் தறேன் உங்களுக்கு...

Tuesday, May 19, 2009

ஞானப் பால்...

என்னடா இது, சம்பந்தர் குடிச்ச மாதிரி ஞானப் பால்னு சொல்லி குழப்பறேனேனு பார்க்கறீங்களா? நான் சின்னப் பையனா இருக்கும்போது... பார்வதி வந்து பால் கொடுத்தாங்களானு கேக்காதீங்க, நான் சின்னப் பையனா இருக்கும் போது சக தோழர்களோட எங்க ஊரு சிவன் கோயில்ல போய் விளையாடறது வழக்கம். சில நாள் திடீர்னு கோயில் ஐயர் ரொம்ப பாசமா கூப்பிடுவாறு, “ டேய் பசங்களா, வந்து ஞானப் பால் வாங்கிட்டு போங்கடா”னு. ”என்ன சாமி இன்னிக்கு விசேஷம்”னு ஒரு பையன் கேக்க “இன்னிக்கு பிரதோஷம்டா, இது சாமிக்கு அபிஷேகம் பண்ணின பால்”னு ஐயர் சொன்னாரு. ஏலக்காய் எல்லாம் போட்டு பால் ரொம்ப சுவையா இருக்கும், எல்லாரும் ஒரு ரெண்டு மூணு கரண்டி வாங்கி குடிப்போம்.

இது நடந்தது இருபது வருஷத்துக்கு முன்னால, அப்ப எல்லாம் பிரதோஷத்துக்கு இப்ப வரமாதிரி கூட்டமெல்லாம் வராது, ஏதோ ஒருத்தர் அல்லது ரெண்டு பேர்தான் இருப்பாங்க. ஆனா இன்னிக்கு எந்த ஐயரும் எந்த கோயில்லயும் ஞானப் பால் குடுக்கறதா தெரியல, அப்படி குடுத்தாங்கன்னா அவ்வளவுதான் அவங்க தலையில் துண்டு போட்டுகிட்டு போக வேண்டியதுதான், இன்னிக்குதான் அவ்வளவு கூட்டம் வருதே பிரதோஷத்துக்கு!

அப்புறம் ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சி, கார்டமம் மில்க் (Cardamom milk) அப்படீனு ஆவின் பால் பாக்கெட் ஒன்னு வந்திச்சி அது கிட்டதட்ட இந்த ஞானப் பால் மாதிரிதான் இருக்கும். இப்பக் கூட எங்கேயாவது ஆவின் பொருட்களைப் பார்த்தா உடனே இந்த ஏலக்காய் பால் இருக்கானு தேடுற பழக்கம் இன்னிக்கும் எங்கிட்ட இருக்கு. கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க, ஏலக்காய், சக்கரை போட்ட பால் என்ன சுவையா இருக்கும்னு அப்புறம் நீங்களும் தேடுவீங்க...

பி.கு. முதல் முதலா ஆரம்பிக்கிறது இறைவன் கிட்டு ஆரம்பிச்சா என்னனு தோணிச்சி, உடனே இந்த ஞானப் பால் ஞாபகத்து வந்திடுச்சி. இது போல உங்களுக்கும் எதாவது அனுபவம் இருந்தா தயங்காம பகிர்ந்து கொள்ளுங்க...

Sunday, May 17, 2009

மறக்கமுடியவில்லை...

இன்பம் மிக்க இந்த பூமியில் பிறந்து நமக்கு விவரம் தெரிய ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை நடந்த நிகழ்வுகள் யாவும் நினைவில் திரைப்படம் போல் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. பரபரப்பான இந்த உலகத்தில் இந்தப் படத்தை பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. சற்றே தனிமையில் அமர்ந்து சிந்தனைக் குதிரையை தட்டிவிட்டோமானால் அன்றோ நம் இனிய நினைவுகள் நம் மனதை குளிரூட்டவரும். ஆஹா! அந்த இனிய நினைவுகளால் எத்தனை நாட்கள் என் கவலைகளை மறந்து களித்திருக்கிறேன்.

வானத்து வெண்ணிலா எங்கு சென்றாலும் உடன் நடந்து வருவது, காக்கா கடி போட்டு மிட்டாய் திண்பது, பனை ஓலைக் காத்தாடி, பனங்கா வண்டி, டயர் வண்டி, கயிற்றால் சுற்றி வளைத்த சிக்கு புக்கு இரயில் வண்டி, தெருவில் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு, திருடன் போலீஸ் விளையாட்டு, திருவிழாக் கால ஆட்டங்கள் இப்படி எத்தனை எத்தனை!

இன்றும் நினைத்தால் இனிக்கிறதே, ஐயகோ...மீண்டும் அந்த வாழ்க்கை திரும்பி வராதா? வாழ்க்கையில் நினைத்ததெல்லாம் விலைக்கு வாங்க முடிகிறதே, ஆனால் மீண்டும் நம்மால் அந்த சிறுவயது வாழ்க்கையை வாங்க முடியுமா? முடியாதுதான் ஆனால் நிச்சயம் அதை நினைத்துக் குதூகலம் அடையமுடியும். நம் பிள்ளைகளுக்கு சொல்லி மகிழ்ச்சியடைய முடியும். ஆனால் நம் குழந்தைகள் அவற்றை அனுபவிக்க முடியாமல் போகிறதே என்று மனதில் ஒரு ஓரத்தில் சிறு கவலை இருந்துகொண்டுதான் இருக்கும். என்ன செய்வது, காலம் மாறிப் போச்சு, உலக மயமாக்குதலும், பன்னாட்டு வர்த்தகமும், மேல் நாட்டுக் கலாச்சாரமும் நம்மை ஏராளமாக மாற்றி விட்டது. சரி, போனதெல்லாம் போகட்டும், வாருங்கள் நம் கடந்த காலத்தை சற்று அசை போடுவோம். என் வாழ்வில் அனுபவித்ததை நான் சொல்கிறேன், அதை ஒட்டி உங்கள் வாழ்வில் நடந்ததை நீங்கள் நினைவு கூர்ந்து இரசியுங்கள், முடிந்தால் மற்றவரும் அனுபவிக்குமாறு ஒரு பதிவைத் தொடங்கி எழுதுங்கள்.

வருகை புரிந்தோர் வரைபடம்...

Click to zoom in on my visitor map!
Create your free world visitor maps